Thursday, September 26, 2013

உ.பா., விபரீதம்! - இது உங்கள் இடம்..!


உ.பா., விபரீதம்!

நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும் இரவு நேர பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்து, கோவில்பட்டியை அடைந்தபோது, எனக்கு முன்சீட்டில் சிறு சலசலப்பு. ஜன்னல் ஓரம் சாய்ந்து தூங்கியபடி இருந்த தன் கணவனை, எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் ஒரு பெண். "கோவில்பட்டி வந்திருச்சு... எந்திரிங்க... எறங்கணுமுல்லா...' என, அவனைத் தட்டித்தடவி, உலுக்கி, குலுக்கி எழுப்ப முயன்றும், அவன் அசைந்தானே தவிர, விழித்தெழவில்லை.

கிட்டத்தட்ட மூன்று மணி நேர இரவுப் பயணம் என்பதால், அப்பெண் சொல்ல சொல்ல கேட்காமல், உ.பா., அருந்திவிட்டு, அவள் கணவன் பேருந்தில் ஏறியதாகவும், இறங்க வேண்டிய கோவில்பட்டி வந்தும், உ.பா., உபயத்தால், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவனை எழுப்ப முடியவில்லை எனவும், அப்பெண்ணிடம் விசாரித்த போது தெரிந்தது.
சக பயணியரும், நடத்துனரும், அப்பெண்ணையும், அவள் கணவனையும் திட்ட, அவள் செய்வதறியாது அழ ஆரம்பித்தாள்.

நானும் என்னோடு வந்த நண்பர்களும், அந்த உ.பா., ஆசாமியை குண்டுக்கட்டாகத் தூக்கி, சாலை ஓரம் கிடத்தி விட்டு கிளம்பினோம். இரவுப் பயணம் என்றாலே, உ.பா., அருந்திவிட்டு பேருந்து அல்லது ரயிலில் ஏறும் பழக்கம், உ.பா., ஆர்வலர்களிடம் உள்ளது. ஆர்வக் கோளாறால் அதிகம் அருந்தி விட்டு, இப்படி நடந்து கொள்வது படுகேவலமானது. பயணத்தின் போது உ.பா., அருந்துவதை தவிர்க்கலாமே!

— எம்.பதூர் முகமது, நாகர்கோவில்.

No comments:

Post a Comment