Thursday, September 26, 2013

நெருங்கினாலும் சொல்லாதீங்க! - இது உங்கள் இடம்..!


நெருங்கினாலும் சொல்லாதீங்க!

கொஞ்சம் நன்றாகப் பேசினாலே போதும்... பெண்கள், தங்கள் மனக் கவலைகளை எல்லாம், கொட்டித் தீர்த்து விடுவர். அதனால், பாதிப்பு ஏற்படும் போது தான், இவரிடம் போய் எல்லாவற்றையும் உளறினோமே என்று மனம் குமுறுவர்.

இப்படித் தான், எங்கள் வீட்டு அருகில் புதிதாக குடியேறினர் அவர்கள். அந்தக் குடும்பத் தலைவிக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட, குடும்ப விஷயம் உட்பட, பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.சமீபத்தில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பெண்களுக்கே உரிய ஜாடை பேச்சுகள், அவ்வப்போது அரங்கேறின. ஒரு நாள், "இவ லட்சணம் தெரியாதா... இவ புத்திக்கு தான், இவளோட பொண்ணுக்கு ஒரு லூசு, புருஷனா கிடைச்சிருக்கான்... இப்ப, இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க, வேற மாப்பிள பார்க்கிறா... ' என்று, சுற்றியுள்ள அனைவரும் கேட்கும்படி கூற, இடிந்து போயினர் தாயும், மகளும்.

அதுவரை, கல்லூரி மாணவி போல் தோற்றம் கொண்ட அவரது மகளை, திருமணம் ஆகாதவர் என்றே நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். உண்மை தெரிந்ததும், பலரும் பலவாறு தூற்ற, மனமுடைந்த அந்தப் பெண், "இதை ஏன் இவர்களிடம் கூறினாய்... எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை...' என்று, தன் அம்மாவிடம் சண்டையிட்டு, விடுதிக்கு சென்று விட்டாள். தான், சரியாக விசாரிக்காமல், திருமணம் செய்து வைத்ததால் தானே மகளின் வாழ்க்கை, வீணாகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அவளது அம்மா, தற்போது, தன் செயலாலே, மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள் என்பதால், நொந்து, நூடுல்ஸ் ஆகிவிட்டார்.

நட்பு என்ற பெயரில், கண்டவரையும் நம்பி, வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியதால் தானே இந்த பிரச்னை... தேவையா இது? பெண்களே... குடும்பப் பிரச்னைகளை, பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி, பின், விழி பிதுங்காதீர்கள்!

— ஆஞ்சலா ராஜம், சென்னை.

No comments:

Post a Comment