Thursday, September 26, 2013

இது போல செய்து காட்டுங்களேன்! - இது உங்கள் இடம்..!


இது போல செய்து காட்டுங்களேன்!

சென்ற வாரம், என் மகள் பணிபுரியும் தொழிற்சாலையில், ஒரு சுற்றறிக்கை தயார் செய்து, அதில், "ஞாயிறு காலை நம் ஆலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, எல்லாரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்...' என, கையெழுத்து பெற்றுக் கொண்டனர். என்ன நிகழ்ச்சி என்றே தெரியாமல், எங்களைப் போலவே நிறைய பேர் அங்கே கூடியிருந்தனர்.


ஆலையின் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில், நூற்றுக்கணக்கானோரை சுற்றி அமரச்செய்து, நடுவில் தீ மூட்டினர். பின், சில அதிகாரிகளின் ஆலோசனைப் படி, தீயை எப்படி அணைப்பது, தீ பரவுவதை எப்படி தடுப்பது, தீயிலிருந்து எப்படி தப்பிப்பது போன்றவற்றை, செயல்முறை விளக்கமாக நடத்திக் காட்டினர்.



அதோடு, ஆலைகளில், அலுவலகங்களில், வீடுகளில், மின் கசிவால் தீ பரவினால் எப்படி அணைப்பது, பிளாஸ்டிக் ரசாயனப்பொருட்கள் எரிந்தால் எவ்வாறு அணைப்பது போன்ற பல்வேறு செய்முறைகளில், விளக்கமாக சோதனை காட்சிகள் நடத்திக் காட்டப்பட்டது. அதற்கான முதலுதவி நடவடிக்கைகளும் அரங்கேறின.



முடிவில், எல்லாருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது. எதிர்பாராத இந்நிகழ்ச்சியை காணவந்த ஊழியர்களின் குடும்பத்தினர், வியந்து பாராட்டியதோடு, தற்காப்பு நடவடிக்கையை கற்றுக்கொண்ட திருப்தியில் சென்றனர். இதற்காக, ஆயிரக்கணக்கில் பணமும் செலவழித்து, பயனுள்ள நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது, பயனுள்ளதாக இருந்தது.



பல ஆலை, அலுவலகங்களில் தீ அணைக்கும் கருவியை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாமல் இருப்பதே, பெரும் பொருட்சேதத்திற்கும், உயிரிழப்பிற்கும் காரணம் என்பதும், எங்களுக்கு புரிந்தது. இதுபோல, மற்ற நிறுவனங்களும், குறைந்தபட்சம் தங்களது ஊழியர்களுக்காவது பயிற்சி அளிக்க முன் வருமா?

— கே.நாகலிங்கம், தஞ்சை.


No comments:

Post a Comment