Friday, September 27, 2013

SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)

இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made  in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.


சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.

அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. 

சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.


இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.
அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும். 

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.     

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.   

மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.   

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.  

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.  


1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.

மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம் நமக்கும் வசப்படும்.    


(நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

ஆர்க்கிமிடிஸ் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.  

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.

ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.

தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.

அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.    

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:

நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...

என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

நம்மாலும் முடியும். மலையை அசைக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் ,வானத்தையும் வசப்படுத்த முடியும்.     

(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்) 

சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாற்று நாயகர்

சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாற்று நாயகர்


மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான் பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார்.

சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார்.

சாக்ரடீஸ் வாழ்ந்த காலகட்டம் கிறிஸ்துவம், இஸ்லாம், பெளத்தம், சமணம், சீக்கியம், போன்ற மதங்கள் தோன்றாத காலம். அபோது ஏதென்ஸ் மக்கள் நிலவையும், சூரியனையும், இதிகாச நாயகர்களையும் கடவுளாக வழிபட்டு வந்தனர். அதனை எதிர்த்து துணிந்து கேள்வி கேட்டார் சாக்ரடீஸ். துணிந்து கேள்வி கேட்டவர்களை எள்ளி நகையாடுவதும், அவர்கள் பணிந்து போக வேண்டும் என்று துன்புறுத்தி வற்புறுத்துவதும்தான் வரலாறு முழுவதும் காணப்படும் உண்மை. கேள்வி கேட்க கேட்க சாக்ரடீஸின் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது. சாக்ரடீஸின் அறிவுப்பூர்வ பேச்சால் புரட்சி வெடிக்கலாம் என அஞ்சினர் ஆட்சியாளர்கள். சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தவர் மீது கிரேக்க இளையர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மறுத்தாலும் தனது 70 ஆவது வயதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார் சாக்ரடீஸ்.


என்னை நீதிமன்றத்தின்முன் நிறுத்திய என் எதிரிகளை நான் குறுக்குவிசாரணை செய்யவிரும்பவில்லை. என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ட்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன் எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸுக்கு மரணமா, மன்னிப்பா என்று முடிவு செய்ய 501 நபர்கள் கொண்ட நீதிக்குழு வாக்களித்தனர் அதில் 220 பேர் மன்னிப்புக்கும் மீதி 281 பேர்கள் மரணத்திற்கும் வாக்களித்தனர். மரண தண்டனை உறுதியானது. ஆனால் அப்போதுகூட கலங்கவில்லை சாக்ரடீஸ் ஏனெனில் மரணத்தைப்பற்றி அவரே ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தார் “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை” . சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ஏதென்ஸில் விழாக்காலமாக இருந்ததால் அவரது மரணம் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டது. கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சாக்ரடீஸை எப்படியாவது விடுவித்துவிட வேண்டுமென்று என்று துணிந்த சாக்ரடீஸ் நண்பரும், மாணவருமான கிரீட்டோ சிறைக்குள் புகுந்தார் தப்பி ஓடிவிடலாம் என சாக்ரடீஸை கெஞ்சினார். அதற்கு சாக்ரடீஸ் “என்னருமை கிரீட்டோ நான் நீதியை நேசித்தவன் நேர்மையானவன் என்ற நற்பெயரோடு இறந்துவிடுகிறேன் எவரும் கவலைப்பட வேண்டாம் என் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற குழப்பமும் வேண்டாம் இறந்தபிறகு உடலில் நான் ஏது அது வெறும் உணர்வற்ற சடலம்தான் அதை எப்படி செய்தால் என்ன” கி.மு.399 ஆம் ஆண்டு சாக்ரடீஸின் மரணம் குறிக்கப்பட்ட நாள் வந்தபோது ஒரு விஷக்கோப்பையை சாக்ரடீஸுக்கு கொடுத்த சிறை அதிகாரி அறிவுத் தெளிவுடன் இருக்கும் தங்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை வருத்துகிறது என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதார். புன்னகையுடன் விஷக்கோப்பையைப் பெற்று மறுமொழி சொல்லாமல் விஷத்தை அருந்தி உயிர் துறந்தார் சாக்ரடீஸ்.

வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்ட சாக்ரடீஸ் தனது மரணத்தைப்பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சாக்ரடீஸின் இறுதி ஊர்வலத்தில் பேசிய அவரது மாணவரும் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவ மேதையுமான பிளேட்டோ இவ்வாறு கூறினார் ஏதென்ஸ் நகர நண்பர்களே ஒரு நல்லவரை மாபெரும் அறிஞரை வீண்பழி சுமத்தி கொன்றுவிட்ட குறை மதிப்படைந்த நாடு என்ற தீராத பழிச்சொல்லை ஏதென்ஸ் சுமக்கப் போகிறது. சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ். சாக்ரடீஸின்மீது பழி சுமத்தியவர்களில் சிலர் பிறகு குற்ற உணர்வால் தூக்கிலிட்டு கொன்றதாக வரலாறு கூறுகிறது.

“உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள் என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு விட்டுச்சென்ற மாபெரும் சொத்து. “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து காட்டியவர் சாக்ரடீஸ். ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் அந்த பாடல்வரி இடம்பெற்றிருந்தது. சளைக்காமல் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டதால் சாக்ரடீஸை ஆயிரத்தில் அல்ல ஆயிரம் கோடியில் ஒருவராக இன்று மதிக்கிறது உலகம்.

நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப்போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் அந்த வானம் என்ன உலகமே வசப்படும்.

அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ்


கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸ் தலையில் ஊற்றினார். அப்போது அவர், “அடடா, என்ன ஆச்சரியம்…சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!” என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனைவியால் அவமானபட்ட நிலையிலும் சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அனுசரித்து போக பழகிக் கொண்டார்.

இவரன்றோ நல்லாசிரியர்! - இது உங்கள் இடம்..!


இவரன்றோ நல்லாசிரியர்!

என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன். அதற்கு அவள், "இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ., பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும், "அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார். என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார்.


— களந்தை மைந்தன், நெல்லை.

Thursday, September 26, 2013

"சீன்' மட்டும் போதுமா? தெளிவு வேண்டாமா... - இது உங்கள் இடம்..!


"சீன்' மட்டும் போதுமா? தெளிவு வேண்டாமா...

சமீபத்தில், நானும், என் அம்மாவும், திருநெல்வேலி செல்வதற்காக, கோயம்பேடு பஸ் நிலையம் சென்று, அரைமணி நேரத்திற்கும் மேலாக, பஸ்சில் அமர்ந்திருந்தோம். சில நிமிடங்கள் கழித்து, எங்கள் அருகில் வந்த ஒரு தம்பதியர், அது, அவர்களது இருக்கை என்று கூறி, எங்களை எழுந்திருக்கச் சொல்லி, வாக்குவாதம் செய்தனர். மெத்தப் படித்த மேதாவி என்பதைக் காட்ட, ஆங்கிலத்தின் நடுவே, தமிழைக் கலந்து பேசினர்.

அவர்களது டிக்கெட்டிலும், எங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த, இருக்கை எண் ஒரே மாதிரியாக இருந்ததால், குழப்பத்தில் ஆழ்ந்தோம். "அதெப்படி... கண்டக்டர் வரட்டும்' என்று, காத்திருந்த எனக்கு, திடீரென ஞானோதயம் உதிக்கவே, அவர்களின் டிக்கெட்டை, மீண்டும் வாங்கிப் பார்த்தேன்; அப்போது தான் தெரிந்தது, அவர்கள், அடுத்த நாள் வருவதற்கு பதிலாக, ஆர்வக் கோளாறில், முதல் நாளே வந்திருந்தது.

அதேபோல, கடந்த ஆண்டு, நாகர்கோவிலிலிருந்து, சென்னை நோக்கி ரயிலில் திரும்பிக் கெண்டிருந்தோம். அப்போது, ஜீன்ஸ் - டீ ஷர்ட் அணிந்து, அசின் போல காட்சியளித்த ஒரு பெண்ணை, டிக்கெட் பரிசோதகர், கண்டபடி திட்டி, பைன் போட்டார்.

விசாரித்த போது, அந்தப் பெண், நாகர்கோவில் - சென்னை மார்க்கத்திற்கு பயணிக்க, சென்னை - நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்திருந்தது தெரிந்தது. அப்பெண்ணிடம் கேட்டதற்கு, அவளது நண்பன், "ஆன் - லைனி'ல் புக் செய்து கொடுத்ததாகக் கூறினாள். இந்த அதிபுத்திசாலி, சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில், "சீன்' போட தெரிந்த, இப்படிப்பட்ட மெத்தப் படித்த மேதாவிகளை, என்னவென்பது? இவர்களைப் போல மாட்டிக் கொண்டு முழிக்காமல், நாம் கவனமாக இருப்போமே!

— ஆஞ்சலா ராஜம், சென்னை.

பெண் குழந்தைகளின் மனம்! - இது உங்கள் இடம்..!

பெண் குழந்தைகளின் மனம்!

இரண்டு இளம் பெண்களுக்கு தாய் நான். என் கணவரின் குணம், நடவடிக்கைகள், தீய பழக்கங்களால், எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றியது. அவரும் முரட்டு குணமுடையவர் என்பதால், அடி, உதை, திட்டு சகஜம். அப்போதெல்லாம், நானும், "ச்சே... கல்யாணமே செய்யாமல் இருந்திருக்கலாம்...' என, சலித்துக் கொள்வேன்.

என் மகள்கள் இருவரும், இதை கவனித்து, திருமணத்தின் மீதே வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளனர். என் மூத்த பெண்ணுக்கு, திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்த போது, அவள், "வேண்டாம்' என, மறுப்பு தெரிவித்தாள். அதையும் மீறி, திருமணம் செய்து வைக்க, முதலிரவிலேயே கணவரைக் கண்டு பயந்து, நடுங்கி, அழுது, கலவரப்படுத்தி விட்டாள்.

தற்போது, மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்று, சிகிச்சை அளித்து வருகிறோம். "கணவருடனான கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள், மகள்கள் முன்னிலையில் நடந்ததால், ஏற்பட்ட விளைவு தான் இது...' என, மனோதத்துவ நிபுணர் கூறினார்.

பெற்றோரே... வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது தான். குடும்பம் என்றால், பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அதை எல்லாம் எதிர் கொண்டு, சமாளித்து, வெற்றி பெறுவது தான் வாழ்க்கை. உங்கள் குழந்தைகளுக்கு, இந்த உணர்வை, சிறு வயதிலிருந்தே ஊட்டுங்கள். பெரியவர்களின் பிரச்னைகளும், சச்சரவுகளும், குழந்தைகளின் மனதை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

— சி.ரங்கநாயகி, கோவை.

காலமும் கெடலை; கலியும் முத்தலை! - இது உங்கள் இடம்..!


காலமும் கெடலை; கலியும் முத்தலை!

கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...

"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.
நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.

"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும், என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.

"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.
"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க. அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?

— வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர். 

பெரிய மனிதர் போர்வையில்... - இது உங்கள் இடம்..!


பெரிய மனிதர் போர்வையில்...

நான், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, மாணவர்களுக்கு, "டியூஷன்' எடுப்பதுடன், ஆங்கில நர்சரி பள்ளி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே, பி.ஏ., மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். என் பள்ளியின் நிர்வாகி, என் பிறந்த நாள் அன்று, பரிசாக, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார். அதில், என் அழகை வர்ணித்தும், அந்த அழகு தனக்கு கிடைக்குமெனில், காலில் விழுவதற்கும் தயார் என்றும் எழுதி இருந்தார்.

இது, எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இத்தனைக்கும், அவருக்கு, வயது 56. அவர் மகன், கல்லூரியில் படிக்கிறான். என் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள, நான் ஏதும் பேசாமல் இருந்ததை, தவறாக புரிந்து கொண்டு, அவ்வப்போது பரிசு பொருட்கள் கொடுப்பதுடன், "பண கஷ்டம் இருந்தால், என்னிடம் சொல்; நான் தருகிறேன். ஆனால், யாரிடமும் சொல்லக் கூடாது...' என்றெல்லாம், பேச ஆரம்பித்து விட்டார்.

இன்னும் போனால், தொடர்ந்து பல பிரச்னைகள் வரக்கூடும் என்று நினைத்து, வேலையை விட்டு விட்டேன். இப்போது, டியூஷன் மட்டுமே எடுத்து வருகிறேன். இந்த காலத்தில், இளைஞர்களை கூட நம்பி விடலாம். ஆனால், வயதானவர் என்ற போர்வையில் இருக்கும் இப்படிப்பட்டவர்களை, நம்பவே கூடாது.

— வ.மனோகரி, கம்பம்.

நெருங்கினாலும் சொல்லாதீங்க! - இது உங்கள் இடம்..!


நெருங்கினாலும் சொல்லாதீங்க!

கொஞ்சம் நன்றாகப் பேசினாலே போதும்... பெண்கள், தங்கள் மனக் கவலைகளை எல்லாம், கொட்டித் தீர்த்து விடுவர். அதனால், பாதிப்பு ஏற்படும் போது தான், இவரிடம் போய் எல்லாவற்றையும் உளறினோமே என்று மனம் குமுறுவர்.

இப்படித் தான், எங்கள் வீட்டு அருகில் புதிதாக குடியேறினர் அவர்கள். அந்தக் குடும்பத் தலைவிக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட, குடும்ப விஷயம் உட்பட, பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.சமீபத்தில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பெண்களுக்கே உரிய ஜாடை பேச்சுகள், அவ்வப்போது அரங்கேறின. ஒரு நாள், "இவ லட்சணம் தெரியாதா... இவ புத்திக்கு தான், இவளோட பொண்ணுக்கு ஒரு லூசு, புருஷனா கிடைச்சிருக்கான்... இப்ப, இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க, வேற மாப்பிள பார்க்கிறா... ' என்று, சுற்றியுள்ள அனைவரும் கேட்கும்படி கூற, இடிந்து போயினர் தாயும், மகளும்.

அதுவரை, கல்லூரி மாணவி போல் தோற்றம் கொண்ட அவரது மகளை, திருமணம் ஆகாதவர் என்றே நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். உண்மை தெரிந்ததும், பலரும் பலவாறு தூற்ற, மனமுடைந்த அந்தப் பெண், "இதை ஏன் இவர்களிடம் கூறினாய்... எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை...' என்று, தன் அம்மாவிடம் சண்டையிட்டு, விடுதிக்கு சென்று விட்டாள். தான், சரியாக விசாரிக்காமல், திருமணம் செய்து வைத்ததால் தானே மகளின் வாழ்க்கை, வீணாகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அவளது அம்மா, தற்போது, தன் செயலாலே, மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள் என்பதால், நொந்து, நூடுல்ஸ் ஆகிவிட்டார்.

நட்பு என்ற பெயரில், கண்டவரையும் நம்பி, வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியதால் தானே இந்த பிரச்னை... தேவையா இது? பெண்களே... குடும்பப் பிரச்னைகளை, பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி, பின், விழி பிதுங்காதீர்கள்!

— ஆஞ்சலா ராஜம், சென்னை.

வாயால் திறக்காதே! - இது உங்கள் இடம்..!


வாயால் திறக்காதே!

நான், எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி மாணவன். எனக்கு நெருக்கமான நண்பர்கள் நால்வர் உண்டு. நாங்கள், வாரம் ஒருமுறை பீர் மட்டும் குடிப்போம். என் நண்பர்களில் ஒருவன், பாட்டில்களை எடுத்து, மூடிகளை பற்களால் திறப்பான். மூடி, "கிஸ்சக்' என்ற சப்தத்துடன் திறந்து கொள்ளும்.

"பாட்டிலை வாயால் திறக்காதே... உன் பல்லுக்கு ஆபத்து. அத்துடன் உன் எச்சில் பட்ட பீரை அருவருப்புடன் குடிக்க வேண்டியிருக்கிறது...' என்பேன். அவனை தவிர்க்கவே, ஓப்பனர் அல்லது நெயில் கட்டருடன் இணைந்த ஓப்பனரை, பார்ட்டிக்கு எடுத்து செல்வேன். "கோழை, பத்தாம் பசலி...' என, நண்பர்கள் என்னை கிண்டல் செய்வர். ஒரு தடவை, ஓப்பனர் தவிர்த்து, பீர் பாட்டிலை திறக்க முயன்றான் நண்பன். "கடக்' என்ற சப்தத்துடன், அவனது பக்கவாட்டு நான்கு மேல் வரிசை பற்கள், ரத்தத்துடன் தெறித்து விழுந்தன. "மாவீரன்' இப்போது, "ஓட்டைப்பல் சிங்காரம்' ஆகிவிட்டான்.

ஆகவே, "குடிமகன்'களே... வாய் தவிர்ப்பீர்; ஓப்பனர் உபயோகிப்பீர்!


— எம்.எம்.ராஜராஜன், தஞ்சாவூர்.

பத்து இலக்க எண்களை துரத்தினவன்! - இது உங்கள் இடம்..!


பத்து இலக்க எண்களை துரத்தினவன்!

நான் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி. அலுவலக பணி தொடர்பாக சென்னை வந்திருந்தேன். சென்னையில் இறங்கும் போது தான், என் மொபைல் போன் காணாமல் போனதை உணர்ந்தேன். என் மனைவி எண்ணோ, சென்னை நண்பர்கள் அலுவலக துணை அதிகாரிகள் எண்ணோ, எனக்கு மனப்பாடமாக தெரியவில்லை. 400க்கும் மேற்பட்ட எண்கள், மொபைல் போன் புக்கில் உள்ளன. அன்று முழுவதும் முகத்தை தொலைத்து விட்டவன் போல பரிதவித்தேன்.

நண்பர்களின், துணை அதிகாரிகளின் மறைமுக கிண்டலுக்கு ஆளானேன். ஷெர்லாக்ஹோம்ஸ் போல் துப்பறிந்து, எட்டு மணி நேரத்திற்கு பின், மனைவி எண்ணை கண்டுபிடித்தேன். எட்டு மணி நேரம் தொடர்பு கொள்ளாததால், எனக்கு என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ என, என் குடும்பத்தினர் பதறியிருக்கின்றனர். ஊர் திரும்பியதும், இரண்டு வேலைகள் செய்தேன். போன்புக் எண்களை டைரியில் பிரதி எடுத்தேன். நெருக்கமான இருபது நபர்களின் எண்களை மனப்பாடம் செய்தேன். குறைந்த விலையில் இரண்டாவது மொபைல் போன் வாங்கி, முதல் மொபைல் போனில் பதிவு செய்த எண்களை பதிந்து, பீரோவில் பாதுகாப்பாய் வைத்தேன். என் அவஸ்தை உங்களுக்கு பாடமாய் இருக்கட்டும்.

— க.சபேசன், திருப்பூர்.

அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்... - இது உங்கள் இடம்..!


அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்...

சமீபத்தில், என் உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டு, இறுதிவரை மணமக்களுடன் இருந்து, அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பில் கவனமாய் இருந்தேன். திருமண ஆல்பத்திற்காக போட்டோகிராபர், அடிக்கடி மணமக்களை பலவிதமான போஸ்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி, பல விதங்களில் போட்டோ எடுத்துக் கொண்டார்.



ஒரு கட்டத்தில், மணமக்கள் இருவரும் முத்தமிட்டுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு மணமக்கள் இருவரும் தயங்கினர். இருந்தாலும், "இதெல்லாம் சகஜம். இப்போதெல்லாம் ஆல்பத்தில் முத்தக்காட்சிகள் இடம் பெறுவது பேஷனாகி விட்டது...' என்று, போட்டோகிராபர் கட்டாயப்படுத்தவே, மணமக்களும் இசைந்தனர். இதைக் கண்ட எனக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி.



என்னதான் நாகரிகம் என்றாலும், தாம்பத்யத்தின் அடிப்படை உணர்வான முத்தத்தை, பலர் முன்னிலையில் பரிமாறிக் கொள்வதும், அதை புகைப்படமாக எடுத்து, பதிவு செய்வதும், கலாசாரத்தை மீறிய செயல் அல்லவா? பின், யாராவது ஆல்பத்தை பார்க்க நேரிட்டால், மணமக்களை தவறாகவோ, உணர்ச்சிமயமாகவோ பார்க்க கூடும் அல்லவா? போட்டோகிராபர், வீடியோகிராபர் இப்படி போஸ் கொடுக்க வற்புறுத்தினாலும், நாம் மரபை மீறக்கூடாது.



அந்தரங்கம் புனிதமானது என்பதை, மணமக்கள் புரிந்து கொள்வது அவசியம்.

— ஆர்.மதன், மதுரை.

மருத்துவரிடம் செல்லும் போது... - இது உங்கள் இடம்..!


மருத்துவரிடம் செல்லும் போது...

குழந்தை நல மருத்துவரிடம், லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்தபோது நடந்த சம்பவம்...



ஒரு நாள், வயதான பெண் ஒருவர், பிறந்து இருபதே நாட்கள் ஆன குழந்தைக்கு, உடல் நிலை சரியில்லாமல் அழைத்து வந்திருந்தார். துணைக்கு யாரும் வரவில்லை. இருப்பினும், டாக்டர் வரும் நேரத்திற்கு, இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து, காத்திருந்தார்.ஒரு மணி நேரம் கடந்ததும், குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தை காய்ச்சலில் அழுகிறது என முதலில் நினைத்தோம். தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், அந்த பெண்மணியிடம் விசாரித்தோம்.



"டாக்டர் வந்த உடனே, முதல் ஆளாக குழந்தையை காட்டி விட்டு வந்துடலாம் என நினைத்து, புட்டிபாலும் இல்லாமல், தாயும் இல்லாமல் வந்தேன். வந்த இடத்தில், இப்படி ஆகி விட்டது...' என்றார் வருத்தமாக. நல்ல வேளையாக, நான், அப்போது ஏழு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவளாக இருந்தேன். உடனே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, அதன் பசியாற்றி னேன். குழந்தை, பாலை குடித்துவிட்டு, தூங்கிவிட்டது. பின், மருத்துவர் வரவும், சிகிச்சை பெற்று சென்றார்.
தாய்மார்களே... நீங்கள் எங்கு சென்றாலும், தாயும், சேயும் சேர்ந்தே செல்லுங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், புட்டிபால் எடுத்துச் செல்லுங்கள

— எம்.எஸ்.தமீனா ஷஹீது, கீழக்கரை.

உ.பா., விபரீதம்! - இது உங்கள் இடம்..!


உ.பா., விபரீதம்!

நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும் இரவு நேர பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்து, கோவில்பட்டியை அடைந்தபோது, எனக்கு முன்சீட்டில் சிறு சலசலப்பு. ஜன்னல் ஓரம் சாய்ந்து தூங்கியபடி இருந்த தன் கணவனை, எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் ஒரு பெண். "கோவில்பட்டி வந்திருச்சு... எந்திரிங்க... எறங்கணுமுல்லா...' என, அவனைத் தட்டித்தடவி, உலுக்கி, குலுக்கி எழுப்ப முயன்றும், அவன் அசைந்தானே தவிர, விழித்தெழவில்லை.

கிட்டத்தட்ட மூன்று மணி நேர இரவுப் பயணம் என்பதால், அப்பெண் சொல்ல சொல்ல கேட்காமல், உ.பா., அருந்திவிட்டு, அவள் கணவன் பேருந்தில் ஏறியதாகவும், இறங்க வேண்டிய கோவில்பட்டி வந்தும், உ.பா., உபயத்தால், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவனை எழுப்ப முடியவில்லை எனவும், அப்பெண்ணிடம் விசாரித்த போது தெரிந்தது.
சக பயணியரும், நடத்துனரும், அப்பெண்ணையும், அவள் கணவனையும் திட்ட, அவள் செய்வதறியாது அழ ஆரம்பித்தாள்.

நானும் என்னோடு வந்த நண்பர்களும், அந்த உ.பா., ஆசாமியை குண்டுக்கட்டாகத் தூக்கி, சாலை ஓரம் கிடத்தி விட்டு கிளம்பினோம். இரவுப் பயணம் என்றாலே, உ.பா., அருந்திவிட்டு பேருந்து அல்லது ரயிலில் ஏறும் பழக்கம், உ.பா., ஆர்வலர்களிடம் உள்ளது. ஆர்வக் கோளாறால் அதிகம் அருந்தி விட்டு, இப்படி நடந்து கொள்வது படுகேவலமானது. பயணத்தின் போது உ.பா., அருந்துவதை தவிர்க்கலாமே!

— எம்.பதூர் முகமது, நாகர்கோவில்.

இது போல செய்து காட்டுங்களேன்! - இது உங்கள் இடம்..!


இது போல செய்து காட்டுங்களேன்!

சென்ற வாரம், என் மகள் பணிபுரியும் தொழிற்சாலையில், ஒரு சுற்றறிக்கை தயார் செய்து, அதில், "ஞாயிறு காலை நம் ஆலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, எல்லாரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்...' என, கையெழுத்து பெற்றுக் கொண்டனர். என்ன நிகழ்ச்சி என்றே தெரியாமல், எங்களைப் போலவே நிறைய பேர் அங்கே கூடியிருந்தனர்.


ஆலையின் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில், நூற்றுக்கணக்கானோரை சுற்றி அமரச்செய்து, நடுவில் தீ மூட்டினர். பின், சில அதிகாரிகளின் ஆலோசனைப் படி, தீயை எப்படி அணைப்பது, தீ பரவுவதை எப்படி தடுப்பது, தீயிலிருந்து எப்படி தப்பிப்பது போன்றவற்றை, செயல்முறை விளக்கமாக நடத்திக் காட்டினர்.



அதோடு, ஆலைகளில், அலுவலகங்களில், வீடுகளில், மின் கசிவால் தீ பரவினால் எப்படி அணைப்பது, பிளாஸ்டிக் ரசாயனப்பொருட்கள் எரிந்தால் எவ்வாறு அணைப்பது போன்ற பல்வேறு செய்முறைகளில், விளக்கமாக சோதனை காட்சிகள் நடத்திக் காட்டப்பட்டது. அதற்கான முதலுதவி நடவடிக்கைகளும் அரங்கேறின.



முடிவில், எல்லாருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது. எதிர்பாராத இந்நிகழ்ச்சியை காணவந்த ஊழியர்களின் குடும்பத்தினர், வியந்து பாராட்டியதோடு, தற்காப்பு நடவடிக்கையை கற்றுக்கொண்ட திருப்தியில் சென்றனர். இதற்காக, ஆயிரக்கணக்கில் பணமும் செலவழித்து, பயனுள்ள நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது, பயனுள்ளதாக இருந்தது.



பல ஆலை, அலுவலகங்களில் தீ அணைக்கும் கருவியை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாமல் இருப்பதே, பெரும் பொருட்சேதத்திற்கும், உயிரிழப்பிற்கும் காரணம் என்பதும், எங்களுக்கு புரிந்தது. இதுபோல, மற்ற நிறுவனங்களும், குறைந்தபட்சம் தங்களது ஊழியர்களுக்காவது பயிற்சி அளிக்க முன் வருமா?

— கே.நாகலிங்கம், தஞ்சை.


காப்பி பூனைகள்! - இது உங்கள் இடம்..!


காப்பி பூனைகள்!

நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். "டிவி'க்கு, பிரபல தனியார் நிறுவனத்தின், டி.டி.எச்., கனெக்ஷன் கொடுத்திருந்தார். இந்தி சானல் ஓடியது. சானல் மாறும் போது கூட, தமிழ் சானல்களுக்கு மாறாமல், மற்ற இந்தி சானல்களுக்கு மாறினார். "தமிழ் சானல்களின் மீது உங்களுக்கு என்ன கோபம்?' என வினவினேன்.

அதற்கு அவர், நம்பர் ஒன் இந்தி சானலின் பெயரை கூறி, "அந்த சானலில் வரும் நிகழ்ச்சிகளை தான், தமிழ் சானல்களில் எல்லாம் காப்பியடிச்சு ப்ரோக்ராம் பண்றாங்க. காப்பிகளை பார்ப்பதற்கு பதிலா, ஒரிஜினலை பாத்திட்டு போலாமே...

"தவிர, இந்தி வெறுப்பை, ஓட்டுப் பொறுக்கிகள், ரெண்டு தலைமுறைக்கு விதைச்சிட்டாங்க. பிள்ளைகளாவது இந்தி சானல்களோட நட்பாகி, இந்தி கத்துக் கட்டுமே... பிள்ளைகள் தமிழகப் பிள்ளைகளாய் தனித்துகிடக்காமல், இந்திய பிள்ளைகளாக சகலவிதத்திலும் உயர்ந்து நிக்கட்டுமே...' என்றார்.

அவர் சொன்னது சரிதான். நானும் "காப்பி கேட்' சானல்களை கட் பண்ணிவிட்டு, இந்தி சானல்களுக்கு தாவி விட்டேன்!

— தங்க.திராவிட செல்வன், திருவாரூர்.

சிறிய தட்டும் பெரிய தட்டும்! - இது உங்கள் இடம்..!


சிறிய தட்டும் பெரிய தட்டும்!

டாக்டர் நண்பர் வீட்டில் சாப்பிடச் சென்றேன். சாப்பாட்டு மேஜையில், பெரியதும், சிறியதுமாக இரண்டு அழகிய பீங்கான் தட்டுகளை, என் முன்னே வைத்தனர். பொரியல், கூட்டு, சாலட் போன்றவற்றை, பெரிய தட்டிலும், சாதத்தைச் சிறிய தட்டிலும் பரிமாற ஆரம்பித்தனர்.

ஏதாவது தவறுதலாகப் பரிமாறுகின்றனரோ என்ற தயக்கத்துடன் கேட்டேன். அவர்: தவறு எதுவும் நேரவில்லை. வேண்டுமென்று தான் இப்படிப் பரிமாறுகிறோம். சாதத்தின் அளவு குறைவாகவும், காய்கறி, பழங்களின் அளவு அதிகமாகவும் சாப்பிட வேண்டும்...
குறைவாகச் சாப்பிட வேண்டியதை, சிறிய தட்டில் போட்டுக் கொண்டால், தட்டு நிறைய சாப்பிட்டது போல, திருப்தி உணர்வு ஏற்பட்டு விடும். நிறையச் சாப்பிட வேண்டிய அயிட்டங்களை, பெரிய தட்டில் போட்டு தாராளமாகச் சாப்பிட வேண்டும். அதனால், எப்போதுமே எங்கள் வீட்டில் இப்படித்தான் பரிமாறுவோம்... என்று, விளக்கமாகச் சொன்னார்.

விருந்தும் கொடுத்து, எப்படி ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றும் கற்று கொடுத்த டாக்டர் குடும்பத்திற்கு, மனமார நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன். இனி, டாக்டர் சொன்னபடி தான் சாப்பிட வேண்டும் என்று, தீர்மானித்தும் விட்டேன். அப்போ.. நீங்க...

— மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.

Golden Quotes


When I Asked God for Strength 

He Gave Me Difficult Situations to Face 

When I Asked God for Brain & Brown 
He Gave Me Puzzles in Life to Solve 

When I Asked God for Happiness 
He Showed Me Some Unhappy People 

When I Asked God for Wealth 
He Showed Me How to Work Hard 

When I Asked God for Favors
He Showed Me Opportunities to Work Hard

When I Asked God for Peace 
He Showed Me How to Help Others 

God Gave Me Nothing I Wanted 
He Gave Me Everything I Needed 

                              - Swami Vivekananda

போட்டாளே ஒரு போடு! - இது உங்கள் இடம்..!


போட்டாளே ஒரு போடு!

நண்பர் ஒருவர், தன் மகள் கல்யாணத்துக்காக, வரன் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மாப்பிள்ளையின் பொருத்தம் சரியாக இருந்தது. பெண் பார்க்க வரும் நிலையில், அந்த பெண், "இந்த மாப்பிள்ளை வேண்டாம், இவர், பள்ளி ஆசிரியர். எனக்கு பள்ளிக்கூட வாத்தியார் தவிர, வேறு மாப்பிள்ளை யாரானாலும் பரவாயில்லை...' என்றும் கூறி விட்டாள்.



உடனே அவளது பெற்றோர், "இந்த காலத்தில், பள்ளிக்கூட வாத்தியார் ஒன்றும் மட்டமில்லம்மா... அவர்களுக்கும் நல்ல சம்பளம். வருடத்தில் மூன்று மாதம் விடுமுறை. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்று நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு...' என்று கூறவும், அந்த பெண், "ஆமாம்... இறைவனுக்கு சமமாக போற்றப்படும் பள்ளி ஆசிரியர்கள் தான், இன்று மாணவர்களை, சிறுநீரை குடிக்கச் சொல்வதும், பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதும், ஏழைக் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகையை அபகரிப்பதுமான செயல்களில் ஈடுபடுகின்றனர்...' என்றாளே பார்க்கலாம்.



"பண்டம் ஒரு இடம் பழி பத்தெடம்' என்பது போல், யாரோ சிலர் செய்யும் தவறுக்கு, அந்த துறையே மதிப்பிழந்து போய் விடுகிறது! இனியாவது, "கறுப்பு ஆடு' ஆசிரியர்கள் திருந்துவரா?

— ஜி.நிலா, சென்னை

வேண்டாம் சுய வைத்தியம்! - இது உங்கள் இடம்..!

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.


அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.



சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!


— ஷோபனாதாசன், சிவகங்கை.

Wednesday, September 4, 2013

பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும்.


பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறார். 

நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக்கோட்டை நெருங்கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி.

''நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதைக்கிற எரிபொருள் பிரச்னைக்கு என் அறிவுக்கு எட்டுன அளவில் ஒரு பொருளைக் கண்டுபிடிச்சு, 'மூலிகைப் பெட்ரோல்’னு பேர் வெச்சேன். அப்போ நாடே பரபரப்பாச்சு. நாலு மாநில முதல்வர்களுக்கு முன், அதை சோதனை செஞ்சு காட்டினேன். ஆனால் என் வளர்ச்சி பல பேரைப் பயமுறுத்த ஆரம்பிச்சது. 'நான் ஒரு ஃபிராடு’னு கதை பரப்ப ஆரம்பிச்சாங்க. 'ராமர் பிள்ளை கண்டுபிடிச்சது பெட்ரோலே இல்லை’னு சொன்னாங்க. சரி, இருக்கட்டும். நான் கண்டுபிடிச்சது பெட்ரோல் இல்லைன்னே வெச்சுக் குவோம். ஆனால், என் கண்டுபிடிப்பை வண்டியில் ஊத்தினா வண்டி ஓடுதுல்ல... அதனால் வண்டிக்கு எந்த பாதிப்பும் இல்லேல்ல... அப்புறம் என்ன?
இத்தனைக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் 42 ரூபாய் விற்ற காலத்தில் ஒரு லிட்டர் 13 ரூபாய்க்கு நான்  கொடுத்தேன். கொஞ்ச  நஞ்சம் இல்லீங்க, 13 லட்சம் லிட்டர் பெட்ரோல் தயாரிச்சு வித்திருக்கேன். அதைக்கூட, 'பெட்ரோலிய மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிச்சுட்டு பொய் சொல்றார்’னு சொன்னாங்க. 42 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி 13 ரூபாய்க்கு விற்க, நான் என்ன லூஸா?
     
 நான் தயாரிச்சு விற்ற 13 லட்சம் லிட்டருக்கும் அரசாங்கத்துக்கு வரி கட்டி இருக்கேன். என்னைத் தப்புன்னு சொல்ற அரசாங்கம், அப்புறம் ஏன் என்கிட்ட வரி வாங்குச்சு. நான் கண்டுபிடிச்ச எரிபொருளுக்கு, 'மூலிகை பெட்ரோல்’னு பேர் வெச்சதுதான் நான் பண்ண ஒரே தப்பு. இப்போ சொல்றேன், நான் கண்டுபிடிச்சது மூலிகைப் பெட்ரோலே கிடையாது. அது ஒரு மாற்று எரிபொருள். அதுல என்ன தப்புன்னாலும் சொல்லுங்க, ஒப்புக்கிறேன். 'இதைப் போட்டா வண்டி சீக்கிரம் ரிப்பேர் ஆகுது. வழக்கத்தை விட குறைவான மைலேஜ் கிடைக்குது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து’ இப்படி எந்தக் குறையையும் என் மாற்று எரிபொருளில் சொல்லவே முடியாது'' என்று படபடவெனப் பேசியவரிடம், ''ஆகஸ்ட் அறிவிப்புப் பற்றி சொல்லுங்களேன்'' என்றதும், அடுத்த ஷாக் கொடுத்தார்.

''என் கண்டுபிடிப்பை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியை சந்திச்சுப் பேசினேன். அவர்கிட்ட என் மாற்று எரிபொருளை சோதனை செஞ்சு காட்டினேன். அதைத்தொடர்ந்து அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவையும் சந்திச்சுப் பேசினேன். இந்த மும்மூர்த்திகளும் என் கண்டுபிடிப்பைப் பார்த்து ஆர்வமாயிட்டாங்க. அதிலும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி, என் கண்டுபிடிப்பைத் தத்து எடுத்துக்கிட்டதுபோல, எல்லா உதவிகளையும் செஞ்சார். கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் செலவில் மாற்று எரிபொருள் தயாரிப்பதற்கான இயந்திரம் தயாராகிடுச்சு. ஹரித்துவாரில் இருக்கு. சென்னையிலும் இடம் பார்த்தாச்சு. கடைசிக் கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கி. அதுவும் முடிஞ்சதுன்னா, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உற்பத்தி ஆரம்பிச்சுடும். பரபரப்பா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆனா இப்போகூட, ரவிசங்கர்ஜியை சந்திக்கப் போற ஒவ்வொரு தடவையும் அதைத் தடுக்கிறதுக்கு பல பேர் சதி செய்றாங்க. ஒருத்தனை வளரவிடாமக் காலைப் பிடிச்சு இழுத்துவிடுறதுல இத்தனைப் பேர் ஏன் ஆர்வமா இருக்காங்கன்னு புரியலை...'' என்ற ராமர் பிள்ளை, அவரது மாற்று எரிபொருள் ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குக் கிடைக்கும் என்று ஆச்சர்யப் படுத்துகிறார்.

''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. நானும் சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம்.  வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன்.

Friday, August 16, 2013

What I Ask and What I Got?


When I Asked God for Strength
He Gave Me Difficult Situations to Face



When I Asked God for Brain & Brawn

He Gave Me Puzzles in Life to Solve

When I Asked God for Happiness
He Showed Me Some Unhappy People



When I Asked God for Wealth
He Showed Me How to Work Hard



When I Asked God for Favors
He Showed Me Opportunities to Work Hard



When I Asked God for Peace
He Showed Me How to Help Others



God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed

- Swami Vivekananda