Thursday, September 26, 2013

பெண் குழந்தைகளின் மனம்! - இது உங்கள் இடம்..!

பெண் குழந்தைகளின் மனம்!

இரண்டு இளம் பெண்களுக்கு தாய் நான். என் கணவரின் குணம், நடவடிக்கைகள், தீய பழக்கங்களால், எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றியது. அவரும் முரட்டு குணமுடையவர் என்பதால், அடி, உதை, திட்டு சகஜம். அப்போதெல்லாம், நானும், "ச்சே... கல்யாணமே செய்யாமல் இருந்திருக்கலாம்...' என, சலித்துக் கொள்வேன்.

என் மகள்கள் இருவரும், இதை கவனித்து, திருமணத்தின் மீதே வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளனர். என் மூத்த பெண்ணுக்கு, திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்த போது, அவள், "வேண்டாம்' என, மறுப்பு தெரிவித்தாள். அதையும் மீறி, திருமணம் செய்து வைக்க, முதலிரவிலேயே கணவரைக் கண்டு பயந்து, நடுங்கி, அழுது, கலவரப்படுத்தி விட்டாள்.

தற்போது, மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்று, சிகிச்சை அளித்து வருகிறோம். "கணவருடனான கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள், மகள்கள் முன்னிலையில் நடந்ததால், ஏற்பட்ட விளைவு தான் இது...' என, மனோதத்துவ நிபுணர் கூறினார்.

பெற்றோரே... வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது தான். குடும்பம் என்றால், பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அதை எல்லாம் எதிர் கொண்டு, சமாளித்து, வெற்றி பெறுவது தான் வாழ்க்கை. உங்கள் குழந்தைகளுக்கு, இந்த உணர்வை, சிறு வயதிலிருந்தே ஊட்டுங்கள். பெரியவர்களின் பிரச்னைகளும், சச்சரவுகளும், குழந்தைகளின் மனதை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

— சி.ரங்கநாயகி, கோவை.

No comments:

Post a Comment