Saturday, May 19, 2012

கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்


கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்

நீ உண்மையிலேயே உலகிற்கு நன்மை / சேவை செய்ய விரும்புகிறாயா?

அப்படி செய்ய முடியாமல் போனதிற்காக வருந்துகிறாயா?

அப்படியானால் நீ எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே எண்ணி கொண்டிரு ,
அதாவது கஷ்டபடுகிறவர்களுக்கு என்னனென உதவிகள் தேவையோ அதை பற்றி எண்ணி கொண்டிரு.


பிரதிபலன் கருதாமல் , நாம் உலகிற்கு செலுத்தும் ஒவ்வோர் நல்ல எண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கபடுகிறது அத்தகைய நல்ல எண்ணம் நமது கர்ம சங்கிலியை ( கர்ம வினையை ) இணைக்கும் வளையம் ஒன்றை உடைத்தெறிகிறது 

மக்களுக்குள் மிகவும் துயவர்கழகும் வரை மேலும் மேலும் அது நம்மை தூய்மை படுத்திக்கொண்டே இருக்கிறது .

தொடர்ந்து புனிதமான  எண்ணங்களை சிந்தித்தபடி நன்மை செய்து கொண்டே இரு , தீய விஷயங்கள் நமக்குள் தலைக்காட்டாதபடி அழுத்திவைக்க அதுதான் வழி .

நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பிறகு சூட்சம தன்மை அடைகிறது , பின்பு அது வித்து வடிவத்தை பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சம உடலில் வாழ்கிறது , மீண்டும் சிறிது காலத்திற்கு பிறகு அது வெளியே வந்து தனக்கு உரிய பலன்களை தருகிறது , இந்த பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது இவ்விதமே மனிதன் தனக்கு தானே வாழ்க்கையை உருவாக்கி  கொள்கிறான் .

உன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணமும் , செயலும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை நிரந்திரமாக பாதுகாக்க தயராக இருக்கிறது என்பதை நீ எப்போதும் நினைவில் வைக்க வேண்டும் 

உன்னால் முடிந்த வரை நல்ல எண்ணங்களையே எண்ணு, உலக நன்மையின் பொருட்டு அந்த எண்ணம் யாரால் செயல்படுத்த முடியுமோ அவர்கள் மனதில் தோன்றி அது (உன் எண்ணம் ) செயலுக்கு வந்து விடும் , (செயல்படுதலை )
குறித்து வருந்தாதே .

                                                                                   --விவேகானந்தர்

விவேகானந்தரின் வீர அறிவுரைகள்




நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.
உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.
நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.
மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு
நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.
குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.
செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.
மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.
மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.
இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.
மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.
மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும்,இந்துக்கள் சிறந்த இந்துக்களாகவும் வாழ வேண்டும் . ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.
கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.
தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.
பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.
உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.
இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.
நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?
உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.
செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.
முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவனிடத்தில்  தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.
பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
நாம் இந்த உலகில் பிறந்தது நம்மை வலிமையுடையவர்களாக்கி கொள்ளவே , நான் வேண்டுவதெல்லாம் வலிமை , வலிமை , வலிமை ஒன்றே 
நான் ஒவ்வொருவரின் முன் வைக்கும் முதல் கேள்வி இது தான் , நீ வலிமை உடையவனாக இருக்கிறாயா? நீ வலிமையை உணர்கிறாயா ? என்பது தான் 
நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.
எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மரணம் மட்டும் தான் . தன்னை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.
எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.
பொதுவாக இளைஞர்கள் ஜோதிடத்தின் பக்கம் செல்வது இல்லை , வலிமை மிக்க இளைஞன் எழுந்து நின்று என் தலை விதியை நானே அமைத்து கொள்வேன் என்கிறான் 
விதி என்பது என்ன ? நீ முன்னர் என்ன செய்தாயோ அதுதான் உனது இன்றைய விதி ,நீ இன்று என்ன செய்கிறாயோ அது உன் நாளைய தலை விதி 
துன்பபடுபவர்களை பார்த்து அது எல்லாம் அவர்கள் தலை விதி , கர்ம வினை என்பதை நான் ஒரு போதும் ஏற்க்க மாட்டேன் 
அது அவர்கள் கர்மாவானால், அதை போக்குவதுதான் எனது கர்மா 
யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.
குருவுக்குப் பணிந்து நடந்தலும் , பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலும் வெற்றிக்கு வழிகளாகும்.
சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே!
என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ 
வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு 
ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ 
எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது.
 கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. 
தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் 
நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் 
மாறாமல் முன்னேறிச் செல்.
நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனது  இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
 நீ அழுவதேன் சகோதரா? மரணமோ, நோயோ உன்கில்லை. துன்பமோ, 
துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ 
வேண்டும்? மாற்றமோ, மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ 
ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன 
வேண்டுமானாலும் சொல்லட்டும் ,நீ உன் முடிவில் உறுதியாக இரு. பிறகு, 
நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.
பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.
கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.
பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.
ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.
ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.
இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.
மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். 
ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.
ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?
நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.
ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.
உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.
எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.
பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.
விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பது அல்ல , அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.
ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.
ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் செய்யும்  சாதாரணக் காரியங்களை கவனித்தாலே அவனுடைய உண்மை தன்மை தெரியும் .
நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய். இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.
தியானம் செய்யுங்கள் ,உன்னுடைய உண்மை தன்மையை நீ தெரிந்து கொள்ள விரும்பினால் நீ தியானம் செய் ,
 மனம் அடங்க மறுக்கிறது , நாம் எங்கே போவது, எல்லோரும் குகைக்கு போய்விடலாமா? அதனால் என்ன பயன்? குகையில் பேய் இருக்குமோ? எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது குகையாகிவிடும், அந்த இடமே சொர்கமாக ஆகிவிடும் .
இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.
இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.
மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான், பிறகு இயற்கையை வென்று விடுகிறான் , இயற்க்கை அவனுக்கு அடங்கி விடுகிறது .
வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
பசு எப்போதாவது பொய் பேசி இருக்கிறதா , ஆனாலும் அது ஒரு பசுதான் ,மனிதன் பொய் பேசுகிறான் பிறகு அவனே தெய்வமாகவும் ஆகி விடுகிறான் 
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.
நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.
பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை?
நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.
நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீ ஒரு நூல் நிலையத்தையே படித்தவனை விட அறிவாளியாக இருப்பாய்.
பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.
வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை.
மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.
சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.
அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.
உனக்கு எத்தனை மொழிகள் தெரிந்தால் என்ன ? உன் மொழி இலக்கண சுத்தமாக இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ? நீ யாராக இருந்தால் என்ன ? கேள்வி இதுதான் உன்னிடம் கொடுப்பதற்க்கு எதாவது இருகிறதா - அப்படியானால் அதை நீ மற்றவருக்கு கொடு 
தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.
இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கையோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.
எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.
இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.
எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.
என் மகனே என் வார்த்தைகளின் மீது உனக்கு சிறிதளவேனும் மதிப்பிருந்தால் முதலில் உன் அறை கதவுகளை திறத்து விடு , துன்பத்தில் வாடுபவர்களை பார் , அறியாமையால் வாடுபவர்களை பார் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய் ,
அவர்களின் துன்பத்தை போக்கு , அறியாமையை போக்கு , அவர்களுக்கு கல்வியறிவு புகட்டு  இக்கருத்துக்களை எல்லாம் அவர்களிடம் பொய் சொல்லு 
விவேகானந்தரின் வீர அறிவுரைகள் - எனும் நூலிலிருந்து சில 
-- விவேகானந்தர்

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?


”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார். 

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள். 

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும். 

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது. 

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை. 
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது. 

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

-என்.கணேசன்

அதிசயம் ஆனால் உண்மை!



தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒருவிதி அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1.        ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.
2.        இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
3.        இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.
4.        இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.
5.        இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)
6.        ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.
7.        இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.
8.        இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
9.        பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.
10.     லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life  பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை...இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது. 

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார்.  இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toyஎன்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதியை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

-என்.கணேசன்