Saturday, September 28, 2013

SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)

இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made  in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.


சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.

அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. 

சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.


இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.
அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும். 

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.     

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.   

மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.   

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.  

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.  


1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.

மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம் நமக்கும் வசப்படும்.    


(நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

ஆர்க்கிமிடிஸ் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.  

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.

ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.

தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.

அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.    

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:

நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...

என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

நம்மாலும் முடியும். மலையை அசைக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் ,வானத்தையும் வசப்படுத்த முடியும்.     

(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்) 

சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாற்று நாயகர்

சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாற்று நாயகர்


மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான் பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார்.

சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார்.

சாக்ரடீஸ் வாழ்ந்த காலகட்டம் கிறிஸ்துவம், இஸ்லாம், பெளத்தம், சமணம், சீக்கியம், போன்ற மதங்கள் தோன்றாத காலம். அபோது ஏதென்ஸ் மக்கள் நிலவையும், சூரியனையும், இதிகாச நாயகர்களையும் கடவுளாக வழிபட்டு வந்தனர். அதனை எதிர்த்து துணிந்து கேள்வி கேட்டார் சாக்ரடீஸ். துணிந்து கேள்வி கேட்டவர்களை எள்ளி நகையாடுவதும், அவர்கள் பணிந்து போக வேண்டும் என்று துன்புறுத்தி வற்புறுத்துவதும்தான் வரலாறு முழுவதும் காணப்படும் உண்மை. கேள்வி கேட்க கேட்க சாக்ரடீஸின் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது. சாக்ரடீஸின் அறிவுப்பூர்வ பேச்சால் புரட்சி வெடிக்கலாம் என அஞ்சினர் ஆட்சியாளர்கள். சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தவர் மீது கிரேக்க இளையர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மறுத்தாலும் தனது 70 ஆவது வயதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார் சாக்ரடீஸ்.


என்னை நீதிமன்றத்தின்முன் நிறுத்திய என் எதிரிகளை நான் குறுக்குவிசாரணை செய்யவிரும்பவில்லை. என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ட்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன் எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸுக்கு மரணமா, மன்னிப்பா என்று முடிவு செய்ய 501 நபர்கள் கொண்ட நீதிக்குழு வாக்களித்தனர் அதில் 220 பேர் மன்னிப்புக்கும் மீதி 281 பேர்கள் மரணத்திற்கும் வாக்களித்தனர். மரண தண்டனை உறுதியானது. ஆனால் அப்போதுகூட கலங்கவில்லை சாக்ரடீஸ் ஏனெனில் மரணத்தைப்பற்றி அவரே ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தார் “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை” . சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ஏதென்ஸில் விழாக்காலமாக இருந்ததால் அவரது மரணம் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டது. கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சாக்ரடீஸை எப்படியாவது விடுவித்துவிட வேண்டுமென்று என்று துணிந்த சாக்ரடீஸ் நண்பரும், மாணவருமான கிரீட்டோ சிறைக்குள் புகுந்தார் தப்பி ஓடிவிடலாம் என சாக்ரடீஸை கெஞ்சினார். அதற்கு சாக்ரடீஸ் “என்னருமை கிரீட்டோ நான் நீதியை நேசித்தவன் நேர்மையானவன் என்ற நற்பெயரோடு இறந்துவிடுகிறேன் எவரும் கவலைப்பட வேண்டாம் என் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற குழப்பமும் வேண்டாம் இறந்தபிறகு உடலில் நான் ஏது அது வெறும் உணர்வற்ற சடலம்தான் அதை எப்படி செய்தால் என்ன” கி.மு.399 ஆம் ஆண்டு சாக்ரடீஸின் மரணம் குறிக்கப்பட்ட நாள் வந்தபோது ஒரு விஷக்கோப்பையை சாக்ரடீஸுக்கு கொடுத்த சிறை அதிகாரி அறிவுத் தெளிவுடன் இருக்கும் தங்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை வருத்துகிறது என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதார். புன்னகையுடன் விஷக்கோப்பையைப் பெற்று மறுமொழி சொல்லாமல் விஷத்தை அருந்தி உயிர் துறந்தார் சாக்ரடீஸ்.

வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்ட சாக்ரடீஸ் தனது மரணத்தைப்பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சாக்ரடீஸின் இறுதி ஊர்வலத்தில் பேசிய அவரது மாணவரும் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவ மேதையுமான பிளேட்டோ இவ்வாறு கூறினார் ஏதென்ஸ் நகர நண்பர்களே ஒரு நல்லவரை மாபெரும் அறிஞரை வீண்பழி சுமத்தி கொன்றுவிட்ட குறை மதிப்படைந்த நாடு என்ற தீராத பழிச்சொல்லை ஏதென்ஸ் சுமக்கப் போகிறது. சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ். சாக்ரடீஸின்மீது பழி சுமத்தியவர்களில் சிலர் பிறகு குற்ற உணர்வால் தூக்கிலிட்டு கொன்றதாக வரலாறு கூறுகிறது.

“உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள் என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு விட்டுச்சென்ற மாபெரும் சொத்து. “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து காட்டியவர் சாக்ரடீஸ். ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் அந்த பாடல்வரி இடம்பெற்றிருந்தது. சளைக்காமல் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டதால் சாக்ரடீஸை ஆயிரத்தில் அல்ல ஆயிரம் கோடியில் ஒருவராக இன்று மதிக்கிறது உலகம்.

நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப்போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் அந்த வானம் என்ன உலகமே வசப்படும்.

அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ்


கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸ் தலையில் ஊற்றினார். அப்போது அவர், “அடடா, என்ன ஆச்சரியம்…சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!” என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனைவியால் அவமானபட்ட நிலையிலும் சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அனுசரித்து போக பழகிக் கொண்டார்.

Friday, September 27, 2013

இவரன்றோ நல்லாசிரியர்! - இது உங்கள் இடம்..!


இவரன்றோ நல்லாசிரியர்!

என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன். அதற்கு அவள், "இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ., பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும், "அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார். என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார்.


— களந்தை மைந்தன், நெல்லை.

"சீன்' மட்டும் போதுமா? தெளிவு வேண்டாமா... - இது உங்கள் இடம்..!


"சீன்' மட்டும் போதுமா? தெளிவு வேண்டாமா...

சமீபத்தில், நானும், என் அம்மாவும், திருநெல்வேலி செல்வதற்காக, கோயம்பேடு பஸ் நிலையம் சென்று, அரைமணி நேரத்திற்கும் மேலாக, பஸ்சில் அமர்ந்திருந்தோம். சில நிமிடங்கள் கழித்து, எங்கள் அருகில் வந்த ஒரு தம்பதியர், அது, அவர்களது இருக்கை என்று கூறி, எங்களை எழுந்திருக்கச் சொல்லி, வாக்குவாதம் செய்தனர். மெத்தப் படித்த மேதாவி என்பதைக் காட்ட, ஆங்கிலத்தின் நடுவே, தமிழைக் கலந்து பேசினர்.

அவர்களது டிக்கெட்டிலும், எங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த, இருக்கை எண் ஒரே மாதிரியாக இருந்ததால், குழப்பத்தில் ஆழ்ந்தோம். "அதெப்படி... கண்டக்டர் வரட்டும்' என்று, காத்திருந்த எனக்கு, திடீரென ஞானோதயம் உதிக்கவே, அவர்களின் டிக்கெட்டை, மீண்டும் வாங்கிப் பார்த்தேன்; அப்போது தான் தெரிந்தது, அவர்கள், அடுத்த நாள் வருவதற்கு பதிலாக, ஆர்வக் கோளாறில், முதல் நாளே வந்திருந்தது.

அதேபோல, கடந்த ஆண்டு, நாகர்கோவிலிலிருந்து, சென்னை நோக்கி ரயிலில் திரும்பிக் கெண்டிருந்தோம். அப்போது, ஜீன்ஸ் - டீ ஷர்ட் அணிந்து, அசின் போல காட்சியளித்த ஒரு பெண்ணை, டிக்கெட் பரிசோதகர், கண்டபடி திட்டி, பைன் போட்டார்.

விசாரித்த போது, அந்தப் பெண், நாகர்கோவில் - சென்னை மார்க்கத்திற்கு பயணிக்க, சென்னை - நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்திருந்தது தெரிந்தது. அப்பெண்ணிடம் கேட்டதற்கு, அவளது நண்பன், "ஆன் - லைனி'ல் புக் செய்து கொடுத்ததாகக் கூறினாள். இந்த அதிபுத்திசாலி, சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில், "சீன்' போட தெரிந்த, இப்படிப்பட்ட மெத்தப் படித்த மேதாவிகளை, என்னவென்பது? இவர்களைப் போல மாட்டிக் கொண்டு முழிக்காமல், நாம் கவனமாக இருப்போமே!

— ஆஞ்சலா ராஜம், சென்னை.

பெண் குழந்தைகளின் மனம்! - இது உங்கள் இடம்..!

பெண் குழந்தைகளின் மனம்!

இரண்டு இளம் பெண்களுக்கு தாய் நான். என் கணவரின் குணம், நடவடிக்கைகள், தீய பழக்கங்களால், எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றியது. அவரும் முரட்டு குணமுடையவர் என்பதால், அடி, உதை, திட்டு சகஜம். அப்போதெல்லாம், நானும், "ச்சே... கல்யாணமே செய்யாமல் இருந்திருக்கலாம்...' என, சலித்துக் கொள்வேன்.

என் மகள்கள் இருவரும், இதை கவனித்து, திருமணத்தின் மீதே வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளனர். என் மூத்த பெண்ணுக்கு, திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்த போது, அவள், "வேண்டாம்' என, மறுப்பு தெரிவித்தாள். அதையும் மீறி, திருமணம் செய்து வைக்க, முதலிரவிலேயே கணவரைக் கண்டு பயந்து, நடுங்கி, அழுது, கலவரப்படுத்தி விட்டாள்.

தற்போது, மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்று, சிகிச்சை அளித்து வருகிறோம். "கணவருடனான கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள், மகள்கள் முன்னிலையில் நடந்ததால், ஏற்பட்ட விளைவு தான் இது...' என, மனோதத்துவ நிபுணர் கூறினார்.

பெற்றோரே... வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது தான். குடும்பம் என்றால், பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அதை எல்லாம் எதிர் கொண்டு, சமாளித்து, வெற்றி பெறுவது தான் வாழ்க்கை. உங்கள் குழந்தைகளுக்கு, இந்த உணர்வை, சிறு வயதிலிருந்தே ஊட்டுங்கள். பெரியவர்களின் பிரச்னைகளும், சச்சரவுகளும், குழந்தைகளின் மனதை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

— சி.ரங்கநாயகி, கோவை.

காலமும் கெடலை; கலியும் முத்தலை! - இது உங்கள் இடம்..!


காலமும் கெடலை; கலியும் முத்தலை!

கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...

"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.
நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.

"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும், என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.

"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.
"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க. அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?

— வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.