அநேகமாக நாம் எல்லோரும், சிறுவயதில் கேட்டு, அல்லது படித்து அறிந்த ஒரு தகவல்:
மகாத்மா காந்தி, சின்னஞ்சிறுவனாக இருந்தபோது 'ஹரிச்சந்திரா' நாடகம் பார்த்தார். எப்போதும் பொய் சொல்லக்கூடாது, உண்மையே பேசவேண்டும் என்கிற கருத்து அவர் மனத்தில்
பதிந்தது. அதன்பிறகு வாழ்நாள்முழுவதும், அந்த நம்பிக்கைதான் அவரை வழிநடத்தியது.
அன்றைய தினம், மோகன்தாஸ் காந்தி அந்த நாடகத்தைப் பார்க்கப் போகாமல், நண்பர்களுடன் விளையாடச் சென்றிருந்தால்? 'களைப்பாக இருக்கிறது' என்று வீட்டில் படுத்துத் தூங்கியிருந்தால்? நாம் ஒரு மகாத்மாவை இழந்திருக்கக்கூடிய அபாயம்
நேர்ந்திருக்குமில்லையா?
மகாத்மா தொடங்கி, அரசியல், கலைத்துறை, விளையாட்டு, பிஸினஸ், இலக்கியம், அறிவியல் என்று பலதுறைச் சாதனையாளர்கள் யாருடைய
வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும், இதுபோன்ற ஒரு (அல்லது பல) திருப்புமுனை அவசியம் இருக்கும். ஒரு நாடகம், ஒரு முதுமை / மரணக் காட்சி, அரசியல் ஆர்வம், ஓர் ஓஸி கம்ப்யூட்டர், ஒரு குறும்பு, ஒரு பயணம், ஒரு தோல்வி, அப்பாவின் அறிவுரை, அம்மாவின் அன்பு, நண்பர்களின் அரவணைப்பு, அல்லது துரோகம், எதேச்சையாகத் தெருமுனையில் பார்த்த ஒரு சம்பவம், வாசித்த ஒரு புத்தகம், சந்தித்த மனிதர்கள் என்று பல சாதனையாளர்களின்
வாழ்க்கைகளைத் திருப்புமுனைகள் தீர்மானித்திருக்கின்றன.
அந்த விநாடியில்
அவர்களுடைய வாழ்க்கை திசை திரும்பியிருக்கும், அதன்பிறகு, வழக்கத்திலிருந்து மீறியவர்களாக அவர்கள் தங்களை
வெளிப்படுத்திக்கொண்டு வெற்றியடைந்திருப்பார்கள். திரைப்படங்களில் மட்டுமில்லை, நிஜ வாழ்க்கைகளில்கூட, எதிர்பாராத 'டர்னிங் பாயின்ட்'களால்தான் சுவாரஸ்யம் சேர்கிறது.
இந்தத் திருப்புமுனைகளை, அப்போது அவர்கள் உடனடியாக அடையாளம் கண்டிருக்க
வாய்ப்பில்லை. ஆனால் பின்னர் சரித்திரம் அவர்களுடைய சாதனைக் கதையைத் திருப்பிப்
பார்க்கும்போது, திருப்புமுனைகளின்
முக்கியத்துவம் புரியவருகிறது.
நம் வாழ்க்கையிலும்
இப்படிப்பட்ட மன / சூழ்நிலை மாற்றங்கள் தென்படுகின்றன, அவற்றைச் சரியான நேரத்தில் புரிந்துகொண்டு, பயன்படுத்திக் கொண்டுவிடுவது சாமர்த்தியம். இந்த
வரிசையில் வரும் வெற்றியாளர்களும், அவர்களுடைய 'திருப்புமுனை'களும் நமக்கு உதவுவார்கள்.
இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் பல பிரபலங்கள், சாதனையாளர்கள், வெற்றிகரமான மனிதர்கள், நிறுவனங்கள், சமூகங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்பு முனைகள், அனைத்தும் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டவை. அந்தச் சம்பவங்களைக் கதை கலந்த வடிவில், சுவாரஸ்யம், சுய முன்னேற்றம், சரித்திரம் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தது மட்டுமே என் வேலை.
வெற்றிக்கும் தோல்விக்கும்
நடுவே, ஒரு
சின்ன நூலிழை வித்தியாசம்தான்.
அந்த நூலிழைதான், இப்போது அந்த இளைஞரைக்
கைவிட்டிருந்தது. வெற்றியை எட்டிப்பிடிக்கமுடியாமல், தவறிக் கீழே
விழுந்துவிட்டார்.
தோற்றுப் போனவர்களைப்
பார்த்து மற்றவர்கள் பரிதாபப்படுவார்கள். ஆனால் மாலைகள், பாராட்டுகளெல்லாம், ஜெயித்தவர்களுக்குதான், ‘நூலிழை
வித்தியாசத்தில்தானே இவர் தோற்றுப் போனார்’ என்று லேசாக முதுகு தட்டி
ஊக்கப்படுத்துகிறவர்கள்கூட யாரும் இல்லை.
டெஹ்ராடூன் மலை முகட்டில்
நின்றுகொண்டு, கீழே
தெரியும் ஏரியைப் பார்த்தார் அப்துல் கலாம். தோல்வி அவரைத் துன்புறுத்திக்
கொண்டிருந்தது.
அதுவும், சாதாரணத் தோல்வியா? ‘இந்த இன்டர்வ்யூவில்
மொத்தம் எட்டுப் பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்’ என்று தெளிவாகச்
சொல்லிவிட்டுதான் நேர்முகத் தேர்வைத் தொடங்கினார்கள். அந்த எட்டு இடங்களுக்கு, மொத்தம் இருபத்தைந்து
பேர் மோதினார்கள்.
எங்கோ இந்தியாவின்
தென்கோடிமுனை கிராமத்திலிருந்து, வடக்கே டெஹ்ராடூன்வரை இதற்காகவே பயணம் செய்து
வந்திருந்தார் கலாம். எப்படியும் தனக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்று ஓர்
அசைக்கமுடியாத நம்பிக்கை.
அதற்கேற்ப, நேர்முகத் தேர்வும்
கடினமாக இல்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் டாண்டாணென்று பதில்
சொல்லிவிட்டார். இனிமேல், அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் கையில்
வாங்கவேண்டியதுதான்.
மேகங்கள் இல்லாத நீல
வானத்தை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டார் அப்துல் கலாம், ‘இன்னும் கொஞ்ச நாளில், நானும் விமானமேறி அங்கே
வருவேன்’
ஆனால், அவருடைய கனவு நெடுநேரம்
நீடிக்கவில்லை. இன்டர்வ்யூவுக்கு வந்திருந்த இருபத்தைந்து பேரில், அவருக்கு ஒன்பதாவது
இடம்தான் கிடைத்தது. அவர்களுக்கு வேண்டியது எட்டுப் பேர்தானே? ‘நீ தேவையில்லை’ என்று கலாமை
நிராகரித்துவிட்டார்கள்.
தன்னுடைய இழப்பை நினைக்க
நினைக்க, அவருக்கு
வேதனையாக இருந்தது. இந்திய விமானப்படையில் பணிபுரியும் அபூர்வமான வாய்ப்பு, விரல்களுக்கு நடுவே
தண்ணீர்போல் வழிந்து ஓடிவிட்டது.
சிறுவயதிலிருந்தே, அவருக்குப் பறக்கும் ஆசை
அதிகம். விமானியாக உலகம் சுற்றலாம், தேச சேவைக்குத் தன்னுடைய பங்களிப்பைச் செய்யலாம்
என்றுதான் இவ்வளவு தூரம் முயற்சி செய்திருந்தார்.
அத்தனையும், தோல்வி, படுதோல்வி.
இன்டர்வ்யூவில் வெற்றியடைந்த எட்டுப் பேரும், விமானம் ஓட்டுவார்கள், ஆனால் நான்? இனிமேல், என் வாழ்க்கை
என்னவாகப்போகிறது?
அப்துல் கலாமின்
மனம்முழுக்கக் கேள்விகள் நிரம்பியிருந்தன, சுற்றிலும் பரந்து
விரிந்திருக்கிற இயற்கை அழகைக்கூட அவரால் ரசிக்கமுடியவில்லை.
சரி, தோற்றுப்போய்விட்டோம்.
அதற்காக, இங்கேயே
நின்றுகொண்டிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா?
ஒரு மனமாற்றத்துக்காக, பக்கத்திலிருந்த
ரிஷிகேஷத்துக்குக் கிளம்பினார் கலாம். அங்கே கங்கை ஆற்றின் புனிதத்தில் குளித்துக்
கரையேறியபோது, கொஞ்சம்
நிம்மதியாக இருந்தது.
ஆனால், கேள்விகள் அவரைத்
தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்தன. அற்புதமான ஒரு வாய்ப்பை, இப்படி அநியாயமாகக்
கோட்டைவிட்டிருக்கிறேனே, அடுத்து என்ன? இன்னொரு நல்ல வாய்ப்பு
எனக்குக் கிடைக்குமா? எப்போது? எங்கே?
கேள்விகள், கவலைகளின் கனத்தைத்
தாங்கமுடியாமல், தொடர்ந்து
நடந்தார் அப்துல் கலாம். எதிரே ஒரு கட்டடம் தென்பட்டது, அருகே நடந்து
கொண்டிருந்தவரிடம் விசாரித்தார், ‘இது என்ன இடம்?’
‘சுவாமி சிவானந்தா ஆசிரமம்’
இனம் புரியாத ஓர்
எதிர்பார்ப்புடன், அந்த ஆசிரமத்தினுள் நுழைந்தார் கலாம். அந்த
விநாடியில், தன்னுடைய
எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்பதுபோல் அவருக்கு உடல் சிலிர்த்தது.
சுவாமி சிவானந்தர், சுத்தமான வெள்ளை ஆடையில்
அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும், ஓர் அழகான அமைதி
குடிகொண்டிருந்தது. மௌனமாக அவரெதிரே போய் நின்றார் அப்துல் கலாம்.
‘வா இளைஞனே, ஏன் உன் முகம்
வாடியிருக்கிறது? என்ன பிரச்னை?’
அதற்காகவே
காத்திருந்ததுபோல், அவரிடம் தன்னுடைய மனக்குறையையெல்லாம் கொட்டினார்
அப்துல் கலாம், ‘சுவாமி, இந்திய
விமானப்படையில் சேரவேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன், இப்போது, அந்த வாய்ப்பு
பறிபோய்விட்டது, அடுத்து
என்ன செய்யப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை’
சுவாமி சிவானந்தர் அமைதி
குலையாமல் புன்னகைத்தார், ‘கலாம், வாழ்க்கை உன்னை எந்தப்
பாதையில் கொண்டுசெல்கிறதோ, அதோடு சண்டை போடாதே, மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்’
‘புரியவில்லை சுவாமி’
‘நீ விமானியாக வேண்டும்
என்று விதிக்கப்படவில்லை, இந்தத் தோல்வி, உன்னுடைய குற்றம் இல்லை, ஏற்கெனவே
எழுதிவைக்கப்பட்ட விதி’
‘அப்படியானால், நான் என்னவாகப் போகிறேன்?’
‘அது நமக்குத் தெரியாது, ஆனால், ஏற்கெனவே
தீர்மானிக்கப்பட்டுவிட்டது’ என்றார் சுவாமி சிவானந்தர், ‘இந்தத் தோல்வியை
மறந்துவிடு, உன்னுடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தேடு, கடவுளின் எண்ணப்படி, எல்லாம் நல்லபடியாக
நடக்கும்’
மீண்டும் பழைய
நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினார் அப்துல் கலாம், தன்னால் விமானியாக
முடியவில்லையே என்கிற வருத்தம், ஏமாற்றம் அவருக்கு இன்னும் மிச்சமிருந்தது. ஆனால்
அதேசமயம், தன்னாலும்
ஜெயித்துவிடமுடியும் என்கிற உறுதியான எண்ணம் தோன்றியிருந்தது.
உடனடியாக, டெல்லி கிளம்பினார் அவர்.
அங்கே, மத்தியப்
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஓர் ஆராய்ச்சிப் பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது.
அந்தத் திருப்புமுனைதான், இன்றைக்கு நாம் நன்றாக
அறிந்த பாரதரத்னா டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமை உருவாக்கியது!
ஒருவேளை, டெஹ்ராடூனில் அவருக்கு
விமானப்படை வேலை கிடைத்திருந்தால், அப்துல் கலாம் சின்ன வயதிலிருந்து ஆசைப்பட்டதுபோல்
அவர் வானத்தை அளந்திருப்பார், விமானத்தில் உலகம் சுற்றி வந்து மகிழ்ந்திருப்பார்.
ஆனால், அதன்பிறகு? எல்லா அரசு
அதிகாரிகளையும்போல் நாற்பது வருடம் சம்பளம் வாங்கி, ஓய்வு பெற்று
பென்ஷனுக்காக் காத்திருக்கப் பிறந்தவரா அப்துல் கலாம்?
அந்த ஒரு தோல்வி, அப்துல் கலாமின்
வாழ்க்கையை வேறொரு புதிய பாதைக்குத் திருப்பிவிட்டது. இந்திய ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி என்று
பல துறைகளில் அற்புதமான பங்களிப்பைச் செய்து, குடியரசுத் தலைவராக
உயர்ந்து எல்லோரின் இதயம் கவர்ந்த அவர், இன்னும் பல
தலைமுறைகளுக்குக் குழந்தைகள், இளைஞர்களின் லட்சிய
பிம்பமாகத் திகழப்போகிறார்.
சில சமயம், தோல்விகள்கூட, கசப்புச் சாயம் பூசிய சாக்லேட்கள்தான். அந்தக் கசப்புச் சுவை நீங்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தால், வெற்றி எனும் இனிப்பு நமக்குக் கிடைக்கும், அப்துல் கலாம்போல!
‘மேட்ச் எப்போ ஆரம்பிக்கும்?’, அந்தப் பையன் பொறுமையில்லாமல்
கேட்டான்.
அக்கம்பக்கத்தில் இருந்த
எல்லோரும், ஒரேமாதிரியாக உதட்டைப்
பிதுக்கினார்கள். ஏன் இன்னும் போட்டி தொடங்கவில்லை என்பதற்கான காரணம், அவர்கள் யாருக்கும் தெரியவில்லை.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை
காலை இந்நேரம் கிரிக்கெட் போட்டி ஜோராகச் சூடு பிடித்திருக்கும். ஆனால் இன்றைக்கு, யாரும் மைதானத்தில் களமிறங்கவில்லை. எல்லோரும் ஒருவர்
முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். என்ன ஆச்சு?
சிறுவன் கபில் தேவுக்கு
இருப்புக்கொள்ளவில்லை. ஒரே இடத்தில் உட்காரமுடியாமல், அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டிருந்தான். அடிக்கடி, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை ஆர்வத்தோடு
எட்டிப்பார்த்தான் அவன்.
ம்ஹூம், எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர்கள் எல்லோரும் கூடிக்
கூடிப் பேசுகிறார்களேதவிர, மேட்ச் தொடங்குகிற வழியைக் காணோம்.
நேரம் போகப்போக, கபிலுக்கு எரிச்சல் அதிகமானது, பேசாமல் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிடலாமா என்றுகூட
நினைத்தான் அவன்.
சிறுவயதிலிருந்தே, அவன் அப்படித்தான். எதற்காகவும் காத்திருப்பது
பிடிக்காது. ஓர் இடத்தில் நிற்காமல், அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேதான் இருப்பான்.
ஓடுவது என்றால், சும்மா விளையாட்டு இல்லை. சண்டிகரில் தொடங்கி, சில மைல் தூரம் இருக்கிற அம்பாலாவரை அதிவேகமாக
ஓடுவான். பிறகு, அதே வேகத்தில் திரும்ப
ஓடி வருவான்.
இத்தனைக்குப்பிறகும், அவன் முகத்தில் துளி களைப்பு தெரியாது. அடுத்து என்ன
விளையாடலாம் என்றுதான் கண்கள் அங்கும் இங்கும் துறுதுறுப்பாக அலைபாய்ந்து
கொண்டிருக்கும்.
சிறுவன் கபில், அம்மா செல்லம். ஏழு குழந்தைகளைப் பெற்ற அந்த
அம்மையாருக்கு, கபில் தேவ் என்றால்
உயிர். அவன் எதைக் கேட்டாலும் செய்து தருவதற்குத் தயாராக இருந்தார் அவர்.
ஆனால் கபில், மற்ற குழந்தைகளைப்போல அது வேண்டும், இது வேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிற ஜாதி இல்லை.
ருசியான சாப்பாடு, நல்ல துணிமணிகள் என்று
எதையும் அவன் எதிர்பார்ப்பதில்லை, கொடுப்பதைச் சாப்பிடுவான், கிடைப்பதை உடுத்திக்கொள்வான், அப்படியே வெளியில் விளையாட ஓடிவிடுவான்.
எந்நேரமும் தரையில் கால்
படாமல் எதையாவது விளையாடிக் கொண்டிருக்கவேண்டும். அது ஒன்றுமட்டும் போதும்
அவனுக்கு, வேறு எதுவுமே தேவையில்லை.
இப்படிச் சும்மா ரோட்டில்
நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தவனை, பள்ளி ஆசிரியர்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். ஓட்டப்
பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் என்று என்னென்னவோ போட்டிகளில்
கலந்துகொண்டு மெடல்களை வாங்கிக் குவித்தான் கபில்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி, ஒரே ஒரு விளையாட்டின்மீதுதான் அவனுக்குத் தீவிரக்
காதல்: கிரிக்கெட்!
இத்தனைக்கும், அவனுக்குக் கிரிக்கெட் விளையாடத் தெரியாது. ஆனால், அநேகமாக எல்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும், ரேடியோ வர்ணனைமூலம் மனக் கண்ணில் பார்த்து
மகிழ்ந்துகொண்டிருந்தான். உள்ளூரில் எங்கே எந்தப் போட்டி நடந்தாலும்
பார்வையாளர்கள் வரிசையில் முதலாவதாக உட்கார்ந்திருப்பான்.
கபில் தேவ் குடும்பம்
வசித்த சண்டிகர் நகரம், பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவுகளை, ‘செக்டார்’ என்று அழைப்பார்கள், நம் ஊரில் தியாகராய நகர், தேனாம்பேட்டை என்பதுபோல், அங்கே ‘செக்டார் 10’, ‘செக்டார் 24’ என்று ஒவ்வொரு
பேட்டைக்கும் பெயர் வைத்திருந்தார்கள்.
இந்த செக்டார்கள்
ஒவ்வொன்றிலும், ஒரு குட்டி கிரிக்கெட்
டீம் இருக்கும். சனி, ஞாயிறுகளில் இந்த அணிகள்
தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். வாரம்தோறும் நடைபெறும் இந்த ‘செக்டார் போட்டி’கள், சண்டிகரில் மிகப் பிரபலம்.
கபில் தேவ் தன்னுடைய ‘செக்டார் 16’ அணி விளையாடும் போட்டி ஒன்றைக்கூடத் தவறவிடமாட்டான், தனக்கு விளையாடத் தெரியாவிட்டாலும், மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கை
தட்டுவதில் அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.
ஆனால் இன்றைக்கு, அந்த மகிழ்ச்சி கிடைக்காமலே போய்விடும்
போலிருக்கிறது. கிரிக்கெட் மேட்ச் நடக்கும், ஜாலியாக ரசித்துப் பார்க்கலாம் என்று ஆவலாகக்
கிளம்பிவந்தால், இங்கே மேட்சும் காணோம், ஒரு மண்ணாங்கட்டியும் காணோம்.
சிறுவன் கபிலுக்கு, பொறுமை போய்விட்டது. நேராக எழுந்து, ‘செக்டார் 16’ அணியின் வீரர்களை நெருங்கினான், ‘என்னாச்சு? ஏன் இன்னும் மேட்ச் ஆரம்பிக்கலை?’
அவர்கள் கபிலை மேலும்
கீழும் பார்த்தார்கள், யார் இந்தப் பொடிப் பையன்?
கபிலும் அவர்களை தைரியமாக
எதிர்கொண்டான், ‘இந்நேரம் மேட்ச்
தொடங்கியிருக்கணுமே, ஏன் எல்லோரும் இப்படி
முழிச்சுகிட்டிருக்கீங்க?’
அப்போதுதான், அவர்கள் விவரத்தைச் சொன்னார்கள். ‘செக்டார் 16’ அணிக்காக விளையாடவேண்டிய ஒரு பையனைக் காணோம், அணியில் ஓர் ஆள் குறைவதால், மேட்ச் இன்னும் தொடங்கவில்லை.
இப்படிச் சொன்னபோது, அவர்களுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது, ‘தம்பி, உனக்கு கிரிக்கெட் ஆடத் தெரியுமா? நீ எங்க டீம்ல சேர்ந்து விளையாடுவியா?’
பதின்மூன்று வயதுச்
சிறுவன் கபில் தேவ், பேந்தப் பேந்த
விழித்தான். அவனுக்குக் கிரிக்கெட் விளையாட ஆசைதான். ஆனால் இதுவரை
விளையாடியதில்லை. ஆகவே, அவர்கள் இப்படித் திடுதிப்பென்று கேட்டதும், அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
‘செக்டார் 16’ அணிக்கு வேறு வழி இல்லை, இதுவரை தலைகாட்டாத அந்த இன்னொரு பையனுக்காகக்
காத்திருப்பதைவிட, இந்தக் கத்துக்குட்டிச்
சிறுவனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.
அதுதான், கபில் தேவின் முதல் கிரிக்கெட் அனுபவம். அதுவரை ஒரு
ரசிகனாக மைதானத்தின் ஓரத்திலிருந்து கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தவன், இப்போதுதான் முதன்முறையாக ரத்தமும் சதையுமாக அதை
உணர்ந்தான். அந்தப் பரவசம், அவன் வாழ்க்கைமுழுவதும் மறக்கமுடியாத ஓர் அனுபவமாக இருந்தது.
அந்த முதல் போட்டியில், கபில் தேவ் அப்படியொன்றும் பெரிதாகச்
சாதித்துவிடவில்லை. ஆனால், அவன் தன்னால் இயன்றவரை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று போராடிய விதம், எல்லோருக்கும் பிடித்திருந்தது.
அதன்பிறகு, பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் கபிலை கிரிக்கெட்டில் கவனம்
செலுத்தும்படி உற்சாகப்படுத்தினார்கள், ‘கபில், உன்னிடம் ஒரு துடிப்பு இருக்கிறது, இயற்கையான திறமை இருக்கிறது, இதைச் சரியாகப் பட்டை தீட்டிப் பயன்படுத்திக்கொண்டால், கிரிக்கெட்டில் நீ இன்னும் பெரிய ஆளாக வரமுடியும்’
அவர்கள் சொன்னதுபோலவே, அந்தத் துடிப்பும் கடின உழைப்பும், கபில் தேவ் நிகஞ்ச் என்கிற அந்தச் சிறுவனை, இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக உயர்த்தியது.
அசாத்தியத் திறமையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம்
பிடித்த கபில் தேவ், அடுத்தடுத்து பல உலகச்
சாதனைகளை நிகழ்த்தினார்.
அவற்றுக்கெல்லாம் சிகரம்
வைத்தாற்போல், 1983ம் ஆண்டு அவர் ஜெயித்துக்
கொடுத்த ‘உலகக் கோப்பை’க்கு, இது வெள்ளி விழா ஆண்டு. இத்தனை வருடங்களில், எத்தனையோ கிரிக்கெட் பிரபலங்கள், திறமையாளர்கள் வந்தும்கூட, நாம் இன்னொரு உலகக் கோப்பையை ஜெயிக்கவே இல்லை என்பது, கபிலின் தனித்தன்மைக்கு ஒரு சாட்சி!
கடினமாக உழைப்பவர்களை, அதிர்ஷ்டம் நிச்சயமாகத் தேடி வரும். கபில் தேவ்போல், எதேச்சையாகக் கிடைக்கிற வாய்ப்பையும்கூட சரியாகப்
பயன்படுத்திக்கொண்டு முன்னேறுகிற திறமைசாலிகளால், எதையும் சாதிக்கமுடியும்!
நன்றி - என். சொக்கன் மற்றும் முத்தாரம் இதழ்